ஆண்: லதா, ஏன் என்னோட பேச மாட்டேன்ற?
பெண்:...........................................................
ஆண்: என்னோட பேச மாட்டியா?
பெண்:_______________________________
ஆண் :பதில் சொல்லு. பேசுவியா? பேச மாட்டியா?
பெண்:-----------------------------------------------
ஆண்: உம் அல்லது ஊஹும்ன்னு ஒரு வார்த்தையாவது சொல்லு
பெண்: ஊஹும்
ஆண் : நீ என்னோட பேச மாட்டேங்கறதுக்குக் காரணமாவது சொல்லு
பெண்: ஊஹும்
ஆண்: என் மேல கோபமா?
பெண்: --------------------------------------------
ஆண்: கோபமெல்லாம் இருக்காதுன்னு நினைக்கிறேன் .சரிதானே?
பெண்:----------------------------------------------
ஆண்: கோபமா ,கோபம் இல்லையா ? பதில் சொல்லு.
பெண்: ___________________________
ஆண்: எத்தனை முறை கேட்கிறேன். பதில் சொல்லு கோபம்தான்னு நினைக்கிறேன்.அப்படித்தானே/
பெண்: ஆமாம் கோபம்தான். உங்ககிட்ட பேசவே எனக்குப் பிடிக்கலை
ஆண்: இப்போ பேசிட்டியே
பெண்: நான் ஒண்ணும் விரும்பிப் பேசலையே
ஆண்: என் மேல என்ன கோபம் ? சொன்னாத்தானே தெரியும்.
பெண்: கோபம்தான் .பயங்கர கோபம்
ஆண்: இல்லை . இது பொய்க்கோபம்
பெண்: இல்லை நிஜமான கோபம்
ஆண்: கோபமா இருக்கிறபோது நீ ரொம்ப அழகா இருக்கிற
பெண்: பேச்சை மாத்தாதீங்க. நான் கோபத்தை விடமாட்டேன் .பேசவும் மாட்டேன்
ஆண்: கோபம் இருக்கிற இடத்திலதான் குணம் இருக்கும். கோபத்தை விடவேண்டாம் .ஆனா நீ பேசணும்
பெண்: இனி ஒரு நாளும் நான் பேச மாட்டேன்
ஆண்: நீ பேசாம இருந்தா என்னால் தாங்க முடியாது
பெண்: நான் இனி பார்க்க வரமாட்டேன்
ஆண்: அப்படீன்னா இப்போ நீ வந்திருக்கியே
பெண்: இனி வரமாட்டேன்னு சொல்ல வந்தேன்.
ஆண்: வராமலே இருந்திருக்கலாமே
பெண்: வராம சொல்ல முடியாதே. அதுக்குத்தான் வந்தேன்.
ஆண்: நீ வராமல் இருந்தா என் நெஞ்சு தாங்காது.
பெண்: சும்மா ஏமாத்தாதீங்க உங்களைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்.
ஆண்: என்ன தெரியும்?
பெண்: சரியான ஏமாத்துக்காரர்னு
ஆண்: நான் யாரையும் ஏமாத்தலை என்னை யாரும் குறை சொல்ல மாட்டாங்க
பெண்: உண்மையில் நீங்க எப்படிப்பட்டவர்னு அவங்க யாருக்கும் தெரியாது.எனக்குத்தான் தெரியும்
ஆண்: நான் ரொம்ப நல்லவன்னு உனக்குத்தான் தெரியும். அதுவும் நல்லாவே தெரியும்.
பெண்: நல்லா நடிச்சி நீங்க நல்லவர்னு நம்ப வச்சிட்டீங்க.ஆனா உண்மையில் ஏமாத்துக்காரர்னு இப்போதான் தெரிஞ்சுது
_______________________________________________________________________________________________________________
ஆண்: என் மேல உள்ள கோபம்தான் உன் கண்ணை மறைக்குது. என்ன கோபம்னு சொல்லேன்.
பெண்: என்னிடம் மட்டும்தானே நீங்க பேசணும்.மற்றவங்ககிட்ட அப்படிஎன்ன பேச்சு உங்களுக்கு?
ஆண்: நான் வேறு பெண்ணிட்ட உன்னிடம் பேசற மாதிரி பேசலையே
பெண்: பொய் சொல்லாதீங்க நீங்க யாரிடம் என்ன பேசுனீங்கன்னு தெரியும்
ஆண்: யார் கிட்ட எப்போ என்ன பேசுனேன்னு நிரூபிக்க முடியுமா
பெண்: முடியும். நீங்க யாரிட்ட பேசினீங்களோஅவதான் சொன்னா
ஆண்: யார் அவள்? என்ன சொன்னா?
பெண்: நீங்க அவளை ரொம்பவும் புகழ்ந்து பேசியிருக்கீங்க ஏன் அவளைப் புகழணும்?
ஆண்: யாருன்னு சொல்லு .யாரையும் நான் புகழ அவசியம் இல்லை
பெண்: ஆண்கள் எல்லோருமே இப்படித்தான் .ரொம்பப் புகழ்ந்து பேசி மயக்கிருவாங்க.
ஆண்: யாரை நான் புகழ்ந்தேன்?. சீக்கிரம் சொல்லு
பெண்: என் தங்கச்சி சுதாதான் சொன்னா
ஆண்: ஒ! அதுவா? அது உன்ன வழிக்குக் கொண்டுவர அவள் போட்ட திட்டம்.
பெண்: என்ன திட்டம்? ஏன் வழிக்குக் கொண்டு வரணும்?
ஆண்: நீ ரொம்ப நாளா உன் மனசுல உள்ளத வெளிப்படுத்தாமல் இருப்பதால் என் மனசு படும் பாட்ட அவளிடம் சொன்னேன்.
பெண்: அது என் சொந்த விஷயம் .என் விருப்பம். அதை ஏன் அவளிடம் சொல்லணும்?
ஆண்: ஆறுதல் கிடைக்கும்னு தான் சொன்னேன்
பெண்: அவ என்ன வழி சொன்னா
_________________________________________________________________________________________________________________
ஆண்: என்னிடம் ஒண்ணும் சொல்லல.ஆனா உன்னிடம் பொய்சொல்லி உன் கோபத்தைத் தூண்டியிருக்கா
பெண் ஓஹோ ! நானும் நம்பிட்டேன் அதனால்தான் பேசக்கூடாதுன்னு முடிவு பண்ணினேன்
___________________________________________________________________________________________________________________
ஆண்: இப்போ உண்மை புரிந்திருக்கும். உன்மேல நான்தான் கோபப்படணும்
பெண் யாரும் கோபப்படவேண்டாம். எனக்கு உங்கமேல எல்லாக் கோபமும் போயிருச்சு.
__________________________________________________________________________________________________
ஆண்: முள்ளிருந்தாலும் வாசமுள்ள ரோஜா நீ! எனக்கு ரொம்ப மகிழ்ச்சி (D.J.Mangalaraj 10-2-2011)
நிச்சயதாரத்தம் என்பது சின்ன நிகழ்ச்சிதான் ..குடும்பத்தில நெருங்கினவங்க கலந்துகிட்டா போதும் .பிறகு நடக்கப் போற கல்யாணத்துக்கு நாம போனால் போதும் “
கல்யாணம் இன்னும் நாலு மாசம் கழிச்சு நடக்கும். அப்ப நாம இருப்போம் என்பதுக்கு என்ன கியாரண்டி இருக்கு?
எனக்கு இந்த அலைச்சல் நல்லது கிடையாது அடுத்த வாரம் இன்னொரு கல்யாணத்திற்குப் போற அலைச்சல் வேற வருது
அதுக்குப் போறதவிட இந்த நிச்சயத்துக்குப் போறதைத் தான் நான் விரும்புறேன்
எமோஷனலா முடிவு எடுக்கக் கூடாது இவுங்க கல்யாணத்துக்கு நாம போறது நிச்சயம் .இப்போ நிச்சயதார்தத்த்துக்கு என்னால வரமுடியாது
நமக்கு நாலுபேரு வேணும். உங்க காரியமா தேடி போவீங்க காரியம் முடிஞ்சதும் அவங்களை அப்படியே விட்டுருவீங்க .சுயநலமா நடக்கிறதுதான் உங்க வழக்கம்
எனக்கு ரெஸ்ட் வேணும் .மணிக்கணக்கா ஒரே இடத்திலே இருக்கிறது என் உடம்புக்கு நல்லதில்ல
இன்னைக்கு நாம போன நிகழ்ச்சியில ஹார்ட் ஆபரேஷன் பற்றி உங்ககிட்ட பேசிக்கிட்டு இருந்தவர் ஹார்ட் பைபாஸ் செஞ்சவர்தான். அவர் சைக்கிள் கூட ஓட்டுறார். உங்களுக்கு என்ன ப்ராப்ளம் ? நீங்க சுயநலமா இருக்கீங்க
அடுத்த வாரம் நம்ம சம்பந்தி தங்கச்சி வீட்டுக் கல்யாணத்துக்கு[ப் போறப்ப வழியிலே நிச்சயதார்த்தம் நடந்த வீட்டுக்குப் போய் எல்லாரையும் பார்த்துவிட்டு பிறகு நம்ம ஊருக்குப் போகலாம், அப்படி அன்பு காட்டினா போதும்
எனக்கு எல்லாரும் வேணும். நான் போனா என்னை எல்லாரும் அப்பிப் புடிசுக்குவாங்க. பெரிய மகள் இப்போதான் எங்கிட்ட பேசினா. உங்க சந்தோசத்துக்கு நீங்க போறது பிடிக்கும்னா நீங்க மட்டும் போங்கன்னு சொல்றா
மற்றவங்க பாராட்டு நமக்கு ஒண்ணும் பண்ணப் போறது கிடையாது இப்போதான் நாம நீண்ட தூரம் போயிட்டு வந்திருக்கோம். திரும்பவும் உடன பிரயாணம் பண்ண முடியாது. அழைக்கிறவங்க ஈசியா அழைச்சிறுவாங்க. இப்போதுலாம் கல்யாணத்துக்கே சிலர் போறது கிடையாது.
நீங்க அது மாதிரி போகாம இருப்பீங்க சாவுன்னா ஒருநாளும் போகமாட்டீங்க .நாங்க கடமையா போயிருவோம்
ஆமா , எனக்குச் சோகம்னா பிடிக்காது. என்னை காலேஜ் ஜாயின்ட் டைரெக்டர் ஒருத்தர் செத்ததுக்கு நீங்க போய்ப் பார்க்கலையான்னு என்னோடு வேலைபார்க்கிறவர் கேட்டாரு நான் சொல்லலை, ஆனா நினைச்சிகிட்டேன்.”நான் போனாலும் அவருக்குத் தெரியாது”ன்னு.இப்படி எடுத்துக்கிடலாம் .தப்பு கிடையாது.
நான் போகமுடிவு பண்ணிட்டேன். டிரைவரை காலைல எட்டு மணிக்கு வரச்சொல்லி போன் பண்ணிட்டேன் அஞ்சு மணி நேரத்தில போயிட்டுத் திரும்பிடலாம்
அன்று காலையில் இதுபோன்று விவாதம் நடந்தது. அந்தக் குடும்பத்தில் மனைவிக்குத் தன்னை மற்றவர் பாராட்டுவதும் புகழ்வதும் மிகவும் பிடிக்கும். கணவனுக்கு யார் பாராட்டும் தேவையில்லை.தன்னைப் பற்றித் தான் வழங்கும் சான்று மட்டுமே போதும் என்று இருப்பவர். மேலும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுபதாவது வயதில் பைபாஸ் சர்ஜரி செய்துள்ளபடியால் உடல் நலத்தைப் பேணுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர் . கூட்டம் என்பது அவருக்கு அலர்ஜி .நாலைந்து பேருக்கு மேல் ஒரே நேரத்தில் வருவது தொந்திரவு என்று கருதுபவர். கல்யாண சம்பிரதாயங்கள் எல்லாம் காலப்போக்கில் மறைந்துவிடும் என்று எண்ணுபவர்.
காலையில் துவங்கிய போராட்டம் கணவன், மனைவி இருவர் உள்ளத்திலும் தொடர்ந்து பாதிப்பு உண்டாக்கியபடி இருந்தது. மனைவிக்குத் தனியாகப் போக மனம் வரவில்லை. அப்படித் தனியே போவது தனக்கு மகிழ்ச்சி தரும் என்று மனைவியும் கருதவில்லை.. கணவனுக்கு வேறு வகையான எண்ணம் ஓடியது. மனைவியைத் தனியாக இதுவரை அனுப்பியது கிடையாது. எங்கும் எப்போதும் இருவருமாகவே போய்வருவார்கள். மனைவி பல நேரங்களில் குத்திக்காட்டுவதுண்டு. தங்கள் கணவனை இழந்துவிட்ட சில பெண்கள் மிகச் சுதந்திரமாக, விரும்பியபடி எங்கும் சென்று கூடிக் குலவி திரும்பிவர முடிகிறது என்றும் எந்தவிதத் தடையும் இல்லாமல் ப்ரியாக இருக்கிறார்கள் என்றும் மனைவி அடிக்கடி கூறுவதுண்டு. அந்தப் பேச்சு அறிவுக்குச் சிறிதும் சம்பந்தம் இல்லாதது என்று மனைவிக்கே தெரியும்.
கணவன் யோசித்துப் பார்த்தார்.. இதுபோன்று தனியே அனுப்புவது புத்திசாலித்தனமான செயலல்ல.என்பது தெளிவாகத் தெரிந்தது. இப்படி ஒரு ஆரம்பத்தை ஏற்படுத்த இடம் அளிப்பது பின்னர் மனைவிக்கு மாறாத குற்ற உணர்வை உண்டாக்கிவிடும் .தான் மட்டும் தனியாகப் போவது ஒருவித வேகத்தில் செய்த விவேகமற்ற செயல் என்று மனைவி வருந்த வேண்டியிருக்கும். வாக்குவாதம் என்றும் வீண் விவாதம் என்றும் தொடர்ந்துகொண்டிருந்தால் அது ஐந்து மணி நேரம் பயணப்பட்டு திரும்புவதைவிட உடலுக்கு ஊறு விளைவிக்கும்.. கணவன் ஒத்துழைப்பு தராமல் போவதால்தான் தனியாகச் செல்லும் நிலை உருவாகிறது. இதுபோன்று எதிர்காலத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது என்று இளகிய மனம் படைத்த கணவன் ஆழ்ந்து யோசிக்காமால் செயல்படும் மனைவிக்காகப் பரிதாபப்பட்டார். தனது விருப்பம் வேறு என்றாலும் இருவருக்கும் வெறுப்பு தொடர்வதற்கு இடம் தராமல் தனது முடிவினை மாற்றிக்கொண்டார் நிச்சயதார்த்தத்துக்கு மனைவியுடன் போக முடிவு செய்தார்.
பின்குறிப்பு: இதை நான் எழுதிய நாள் :Saturday 5-1-2016 நேரம் மாலை 7:00 மனைவியின் விருப்பப்படி போவது என முடிவை எழுதி நேரில் கொடுக்க விரும்பினேன்.Suja வீட்டில் வைத்து எழுதினேன் .ஆனால் அதைக் கீழேவந்து கொடுக்கும் முன்பே போகவேண்டாம் என்று என் மனைவியின் முடிவும் மாறியிருந்தது.
________________________________________________________________________________________
இந்த உலகில் கவலை இல்லாத மனிதன் என்று யாருமே இல்லை. பெரும்பாலும் மனிதன் அவனது வாழ்வில் சந்திப்பது துன்பமும் துயரமும்தான்.. மகிழ்ச்சி மனிதன் வாழ்வில் அத்தி பூத்தது போன்று மிக அபூர்வமாகத்தான்.தோன்றுகிறது. எனவே யாராவது மகிழ்ச்சியில் மூழ்கினால் அதனை மனதார வரவேற்கவேண்டுமே தவிர அதற்குத் தடை ஏற்படுத்தக் கூடாது.மகிழ்ச்சியில் திளைப்பது தப்பான காரியம் அல்ல.இவ்வுலகில் காரிருள் கப்பிக் கிடக்கும் நேரத்தில் ஒளிச்சுடர் எங்கிருந்து வந்தாலும் அதனை யாரும் போற்றி வரவேற்க வேண்டுமே தவிர அதனைத் தடுக்க நினைக்கக் கூடாது..ஆனால் சிலருக்கு மகிழ்ச்சி பொங்குவதைப்பொறுத்துக் கொள்ளமுடிவதில்லை.மகிழ்ச்சி தவறு என்று அவர்கள் கருதுவதுதான் இதற்க்குக் காரணம்.மத போதனையும் மகிழ்ச்சிக்கு எதிராகவே இருக்கிறது. அதற்குக் காரணம் மனிதன் சொல்வதுதான் மதம் என்ற பெயரில் அரங்கேறுகிறது..கோலோச்சுகிறது
அது மாநகரம் அல்ல .அதே நேரம் அது கிராமமும் அல்ல. பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக சிறப்பு நிலை நகராட்சி என்ற அந்தஸ்தை அது அடைந்துள்ளது.இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் நவீன வரவுகள் அங்கே மெல்ல மெல்ல எட்டிப் பார்த்த வண்ணம் இருக்கின்றன. மக்கள் நகர வாழ்க்கை முறையினை விரும்பி வரவேற்கின்றனர்.அதிலும் முக்கியமாக இளைய தலைமுறையினர் புதியவை புகுதலையே ஆதரிக்கின்றனர்.. கிராமத்துப் பழக்க வழக்கங்களைப் பின்பற்ற இளம் வயது காளைகளும் கன்னியரும் தயாராக இல்லை. ஆனால் அறுபது எழுபது வயதைத் தாண்டிய ஆண்களும் பெண்களும் இதற்கு நேர் மாறாக பழைய வாழ்வு முறையையே பெரிதும் விரும்பி கடைபிடித்து வருகின்றனர்..
புதுமையின் வரவு மக்களது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் மிகவும் வெளிப்படையாக பிரதிபலித்தது. பணவரவு அதிகம் உள்ளதால் உணவு உடை இருப்பிடம் இவற்றில் எளிமை விடை பெற்று ஆடம்பரம் புகுந்துகொண்டது. எளிய வாழ்கை வாழ்வதை யாரும் விரும்பவில்லை. சொகுசாக வாழ்வதே இளையோருக்கு மிகவும் பிடித்துஇருந்தது..எல்லா வசதிகளையும் வீட்டினுள் அமைத்துக்கொள்ள எவ்வளவு பணம் என்றாலும் அதைச்செலவிடும் மனநிலை மக்கள் யாவருக்கும் வந்துவிட்டது. பெரும் பாலானோரிடம் எல்.ஈ.டி டி.வி ,ஏசி, பிரிட்ஜ் சோபா ஸ்மார்ட்போன், லாப்டாப் டூவீலர், கார், என அனைத்திலும் ஆடம்பரம் நிறைந்து வழிந்தது.மொத்தத்தில் பழமையைக் கட்டிக்கொண்டு அழ யாரும் தயாராக இல்லை.
இந்த சூழலில் நிகழும் கதைதான் இது. இரண்டு தலைமுறைகள் சம்பந்தப்பட்டுள்ள கதை இது. எழுபது வயதில் உள்ள பணிஓய்வு பெற்ற பெரியவரும் முதுமையின் வாயிலில் நிற்கும் அவரது மனைவியும் ஒரு தலைமுறையினர்.. அவரது ஒரே மகன் மோகனும் பெரியவரின் மருமகள் லதாவும் அடுத்த தலைமுறையினர். இவ்விரு தலைமுறையினருக்கும் இடையில் நிகழும் பிரச்சினை பற்றியதே இக்கதை.இதே ஊரில் பிறந்து கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையில் முன்னேறி வீடு கட்ட நிலம் வாங்கி அதில் தோட்டம் அமைத்து அதன் நடுவில் குறைந்த பட்ஜெட்டில் வீடு கட்டி எளிமையான வாழ்வில் மனநிறைவு காண்பவர் பணி ஓய்வு பெற்ற அந்த பெரியவர். அவரிடம் மற்றவற்குப் பிடிக்காதது அவரது பிடிவாத குணம்தான். அதனால் முக்கியமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுவது அவரது மனைவி ஆகும். முதியவர் சொல்வது தான் வேதவாக்கு என்று வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது...
பெரியவருக்கு அவரது ஊரும் ,தோட்டமும் வீடும் விட்டுபிரிய முடிபாதவையாக விளங்கின. ஒவ்வொரு நாளும் அவர் கூடவே நின்று பாத்துப் பார்த்துக் கட்டிய வீடு அது. ஒவ்வொரு செங்கலாக வைத்து அங்குல அங்குலமாக தனது வீடு வளர்வதைக் கண்டு மகிழ்ச்சி பெற்றிருக்கிறார்.வீடு மட்டும் அவரை ஈர்க்கவில்ல. வீடு கட்ட விலைக்கு வாங்கிய நிலத்தில் ஏற்கனவே மரங்களும் செடிகளும் நிறைந்த தோட்டம் இருந்தது. வீடு ஒரு ஓரமாகக் கட்டப்பட்டு எஞ்சிய நிலம் முழுதும் தோட்டம் இருந்தது. தோட்டத்தில் தென்னை மா, பலா கொய்யா சப்போட்டா மாதுளை மரங்கள் இருந்தன. நிழலுக்கும் காற்றுக்கும் என்று வேப்பமரம் தோட்டத்தின் நடுவில் இருந்தது. வீட்டைச் சுற்றி ரோஜா, குரோட்டன்ஸ் செடிகள் நிறைந்திருந்தன.மல்லிகைப் பந்தலில் மல்லிகை மலர்கள் பூத்து மணம் பரப்பின. பன்னீர்ப் பூக்கள் மலர்ந்து தரையில் விழுந்து சுற்றிலும் மணம்வீசின.
மகிழம் பூவின் வாசனையும் நாள் முழுவதும் அங்கு பரவி மனத்தை மகிழ்வித்தது.தோட்டத்தின் நடுவில் ஆழம் குறைந்த கிணறும் நீர் இறைக்க துலாவும் கிணற்றை ஒட்டி நீரைப்பிடித்து வைக்கத் தொட்டியும் இருந்தன.
மேலும் தோட்டத்தில் காலி இடம் இருந்தது.அதில் கத்தரி வெண்டை,தக்காளி செடிகளையும் புடலை,பீர்க்கை பூசணி கொடிகளையும் பெரியவர் வளர்த்தார்மண்ணைக் கொத்திச் சீர்ப்படுத்தி,உரமிட்டு,பின் சிறு குழி தோண்டி அதில் விதையைப் போட்டு மண்ணால் மூடி நீரூற்றி ,விதை முளைத்துவரக் காத்திருந்து , சில நாள் கழித்து விதைமுளை மேல்மண்ணை விலக்கிக்கொண்டு வெளிவரும்போது அதைக் கண்டு இன்பம். அடைவார். தினமும் காலையில் நீரூற்றி ஒருநாளில் பலமுறை சென்று பார்த்து நாளுக்குநாள் செடியின் வளர்ச்சியைக்காணும்போது அவரது இதயம் மலர்ச்சி பெறும். !செடியில் துளிர் தோன்றி, இளம் துளிர் எல்லாம் தளிராகி, தளிர் எல்லாம் இலையாகி பசுமையாகக் காட்சி அளிப்பது அவர் மனத்தை ஈர்க்கும். !செடியில் மொட்டுத் தோன்றி மொட்டெல்லாம் மலர்களாக மலர்ந்திடும்போது அவர் உள்ளமும் மலரும்.
அழகு மலர்களின் வண்ணமும் . நறுமணமும் அவரது மனத்தை மயக்கின.. தோட்டத்தில் மாரிக்காலத்தின் வரவால் புத்தாடை பூண்டிடும் பூமி.!புத்துயிர் பெற்றிடும் புள்ளினங்கள் ! மழைக்காலம் வந்து பச்சை நிறக் கம்பளத்தால் நிலமகளுக்கு மேலாடை போர்த்திடும் அழகுக்காட்சியில் அவர் மனம் லயித்துப் போகும். மழை பெய்து மண்ணின் வாசனையைக் கிளப்பும்போது அது அவரது உள்ளத்தைக் கிளரும். வீட்டுத் தோட்டத்திலேயே இயற்கையின் அழகு கொட்டிகிடப்பதாகக் கருதி எல்லையில்லா ஆனந்தம் அடைந்துவந்தார்.
கோடைக் காலத்திலே காலை எட்டு மணிக்கெல்லாம் கூட பகலவனின் வெம்மை உச்சக்கட்டத்தை நோக்கி உயரத் துவங்கிவிடும். மரங்கள் செறிந்த, அடர்ந்த தோட்டத்தின் குளிர்நிழல் உடலுக்கு இதமாக இருக்கும். மதிய வேளையில் மரத்துக்கடியில் கயிற்றுக்கட்டிலில் படுத்துக் கிடப்பதைச் சுகமான அனுபவமாக அவர் உணர்வார். அங்கே அமைந்த கிணற்றின் குளிர்ந்த நீரில் குளித்தால் தண்ணீரின் தண்மை உடலுக்கும் உள்ளத்துக்கும் மிகமிக இதமாக இருக்கும். பொழுதெல்லாம் குளித்தவண்ணமே, நீரில் மூழ்கியவாறே இருக்கத் தோன்றும். பெரியவருக்குக் கோடைக்காலத்தில் அத்தோட்டத்து வேப்பமர நிழலும் கிணற்று நீரும் கொடைக்கானலில் தங்கும் நேரத்தில் கிடைக்கின்ற மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியைத் தந்தன. வீடும் தோட்டமும் தவிர அவர் பிறந்து வளர்ந்து இளமைப் பருவம் கழிந்த ஊர் அது என்பதால் வேறு எங்கு போனாலும் அங்கு தொடர்ந்து தங்க கொஞ்சம்கூடப் பிடிக்காது. தனது ஊரில் மக்களிடம் அளவளாவி மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பதே அவருக்குப் பிடிக்கும்.
உடல் நலம் மட்டுமே உண்மையான சொத்து .நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை இளம் வயதிலேயே பெரியவர் நன்கு உணர்ந்திருந்தார். மன நிறைவு மட்டுமே மகிழ்ச்சிக்குத் திறவுகோல் என்று ஏற்றுக்கொண்டவர். அவர் மனைவியும் அவரது கருத்துப்படி நடக்க வேண்டி இருந்தது.மகன்மேல்அளவுகடந்த அன்பும் பாசமும் கொண்டு அவ்வப்போது பட்டணத்திற்குச் சென்று மகன் வீட்டில் தங்கி மருமகளையும் இரண்டு பேத்திகளையும் கண்டு பேசி பழகி மகிழ்ந்து மீண்டும் ஊர் திரும்புவார்கள். பணிஒய்வுக்குப் பின் முதிவருக்கும் அவரது மனைவிக்கும் சொந்த ஊரும் சொந்தவீடுமே சொர்க்கமாகத் திகழ்ந்தன. நல்ல உடல் நலத்துடன் நிறைந்த மனத்துடன் தம்பதியர் இருவரும் நாட்களைக் கழித்து வந்தனர்.
iஇவ்வாறு அவர்கள் வாழ்க்கை சுமுகமாக ஓடிக்கொண்டிருந்த நேரத்தில்தான் அவர்களது மகனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மகன் அம்மாவிடம் பேசினான். “ அம்மா நீங்க ரெண்டு பேரும் தனியா அங்கே இருந்து ஏன் கஷ்டப்படுறீங்க? எங்களோடு வந்து இருந்தா பேத்திமாரின் படிப்புக்கு உதவியாக இருக்கும். இங்க உங்களுக்கு ஏ.சி அட்டாச்டு பாத்ரூமுடன் . பெட்ரூம் மற்றும் எல்லா வசதியும் இருக்கிறது.நீங்க எங்களோடேயே நிரந்திரமாக இருக்க முடியும்.. அப்பாகிட்ட சொல்லுங்க “
எதையும் அம்மா மூலம் சொன்னாத்தான் கொஞ்சமாவது அப்பா கேட்பார் என்பது மகனுக்கு நன்றாகத் தெரியும். அம்மா தன் மகன் சொன்னதைக் கேட்டு சிறிது நேரம் யோசித்து விட்டு போனில் தொடர்ந்தார்கள் “தம்பி, உன் விருப்பம் சரிதான். ஆனால் அப்பாவுக்கு இந்த ஊரையும் வீட்டையும் விட்டு வேறு எங்கும் அதிக நாட்கள் போகப் பிடிக்காது. எதற்கும் நான் அப்பாவிடம் நீ சொன்னபடி சொல்றேன்பா “
இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் சென்னையிலிருந்து அம்மாவுக்கு மகன் போன் போட்டான். “அம்மா, நீங்கள் இருவரும் சென்னை வந்து எங்களோடு ஒரு வருடம் இருக்கும்போது நமது வீட்டுமனையில் பேஸ்மெண்டில் கார் பார்கிங், ஒவ்வொரு ப்ளோரிலும் மூன்று வீடுகள் என மொத்தம் ஒன்பது வீடுகள் கட்டி அவற்றில் கிரௌண்ட் ப்ளோரில் மூன்றை நமக்கு வைத்துக் கொண்டு மற்ற ஆறு வீடுகளையும் நல்ல விலைக்கு விற்று பணத்தை பாங்கில் போட்டுவிடாலாம்..அப்பாவும் நீங்களும் ஒரு வருடம் சென்னையில் எங்களுடன் இருந்து விட்டு அபார்ட்மென்ட்கள் கட்டி முடிந்ததும் திரும்பவும் ஊருக்குப்போய் கீழ் வீடுகள் ஒன்றில் இருந்துகொள்ளலாம். தரைத் தளத்தில் நம் விருப்பபடி ப்ளான் போட்டு ஒரே வீடாகப் பெரிதாகக் கட்டிக் கொள்ளலாம்அப்பாவிடம் நீங்கள் முதலில் சொல்லி வையுங்கள் .ஊருக்கு நான் வரும்போது நேரில் சொல்லுகிறேன்” அம்மாவுக்கு மகன் சென்னைக்கு வந்து தங்கும்படி கூறியது உடன்பாடுதான். ஆனால் இப்போதுள்ள வீட்டையும் சுற்றி உள்ள தோட்டத்தையும் அழித்துவிட்டு அந்த இடத்தில் அபார்ட்மென்ட்கள் கட்டும் யோசனை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. நிச்சயமாக தனது கணவருக்கு இது துளியும் பிடிக்காது என்று உணர்ந்ததால் அம்மா மகனிடம் போனில் கீழ்வருமாறு கூறினார். “ தம்பி, உன் அப்பாவிடம் நீயே நேரில் வந்து கூறு. அவர் சரியான பழைமைவாதி. எனக்கு அவரிடம் கூற பயமாக இருக்கிறது.”
தந்தையிடம் தன்னால் கூற முடியாது என்று மகனிடம் தாய் கூறியபோதும் ஒருவாரம் சென்ற பின்னர் கணவரிடம் மெதுவாக மகனது திட்டம் பற்றிய பேச்சை ஆரம்பித்தார்.. “போன வாரம் மகன் சொன்னதை நான் சொல்ல வேண்டாம்னு நினைச்சேன். அவனை நேரில் வந்து சொல்லச் சொன்னேன்.அவன் நம்ம இரண்டு பேரையும் சென்னைக்கு வந்து அவனுடன் ஒரு வருடம் கூட இருக்கணும்னு கூப்பிடுறான். அந்த ஒரு வருடத்திற்குள்இங்க நமது வீடு மற்றும் தோட்டம் இருக்கிற இந்த இடத்திலே பேஸ்மெண்டில் கார் பார்கிங், ஒவ்வொரு ப்ளோரிலும் மூன்று வீடுகள் என மொத்தம் ஒன்பது வீடுகள் கட்டி முடிக்கலாம்னு யோசனை சொல்றான். விலைவாசி ஏறும்முன்னால் செய்து முடித்தால் அது அவனுக்கு ரொம்ப லாபமா இருக்குமாம். உங்க கிட்ட நேரில் வரும்போது சொல்லுவான் “
“ எனக்கு மகன் வீட்டில் போய் இருக்க விருப்பம் எள்ளளவும் கிடையாது. மேலும் நாம் இருக்கிற வீட்டையும் தோட்டத்தையும் நான்விட்டுக் கொடுக்க முடியாது. அவனுக்கு லாபம் வருதுன்னு இப்பவே என் உயிரா இருக்கிறதை இழக்க முடியாது. நீயே அவனுக்கு எடுத்துச் சொல்லிவிடு.” பெரியவர் தன மனைவியிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.
தனது கணவர் இப்படித்தான் முடிவெடுப்பார் என்பது ஏற்கனவே அவரது மனைவி எதிர்பார்த்ததுதான். கல்யாணம் ஆகி இப்போது நாற்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த நீண்ட காலத்தில் பலமுறை அவரது கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார். பெற்றோர் தம் பிள்ளைகளுக்குத் தம் சொத்து மற்றும் சம்பாத்யத்திலிருந்து கொடுப்பதைத் தங்கள் காலத்திற்குப் பின்பே கொடுக்கவேண்டும். தம் கையில் நிறைய பணம் ரொக்கமாக எப்போதும் வைத்திருக்க வேண்டும். எந்தசொத்தும் உடனடித் தேவைக்குப் பயன்படாது. நிலம், வீடு தங்கம் முதலியவற்றில் முதலீடு செய்வது நெருக்கடி நேரத்தில் கைகொடுக்காது. ஏனெனில் பிள்ளைகள் அன்பு காட்ட முடியும்..ஆனால் பணம் செலவு செய்ய முடியாது.மருத்துவச் சிகிச்சை என்று ஏதேனும் வந்துவிட்டால் சிறு தொகைகூட அவர்களால் கொடுக்க இயலாமல் போகும். கட்டிடம் சொந்தமாக இருக்கலாம்.கட்டிடத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. பத்து மடங்காகப் பெருகக் கூடிய பணத்தை, தமது சுயநலத்துக்காக அவர்களுக்கு உடனடியாகக் கொடுக்காமல் முடக்கி வைப்பது வீணடித்தல் என்று பிள்ளைகள் கருதலாம்.ஆனால் கடைசி காலத்தில் யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக செலவு செய்ய, யாவரும் தாமாக முன் வந்து கவனிக்க வைப்பதை உறுதி செய்வது புத்திசாலித்தனம் ஆகும். லட்சக்கணக்காக , வாழ்நாளில் சம்பாதித்து ராஜ வாழ்வு வாழ்ந்த யாரும் வாழ்வின் இறுதிக்காலத்தில் பிச்சைக்கார நிலைமைக்குத் தம்மை தள்ளிக்கொள்ளக்கூடாது. பிள்ளைகளுக்குச் சுயமாகச் சம்பாதிக்கும் ஆற்றல் உண்டு.. அவர்கள் பின்பு கோடிகோடியாக சம்பாதித்துக் கொள்ள முடியும்.
மீண்டும் மகனிடமிருந்து போன் வந்தால் சொல்லலாம் என்று நினைத்து மகன் விரும்பியபடி செய்ய அப்பா சம்மதிக்கவில்லை என்பதை அம்மா தனது மகனிடம் உடனே கூறவில்லை. ஒரு மாதம் கழிந்த பின்னர் ஒருநாள் மகனது போன் வந்தது. அப்பா மகனின் யோசனையை ஏற்கவில்லை என்பதை மெல்ல மெல்ல அம்மா சொல்லிவிட்டார். மகனுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. “ நான் உங்களது ஒரே மகன் என்னும்போது எனக்குத்தரப்போவதை ஏன் இப்போதே கொடுக்கக்கூடாது. காலம் பிந்தினால் கட்டுமான செலவு பல மடங்கு அதிகரிக்கும். அப்பா ஏன் இப்படி சுயநலத்தோடு நடந்து கொள்கிறார்கள்?” மகன் அம்மாவிடம் கேட்டான். ”நான் சொல்லிப் பார்த்துவிட்டேன். அப்பாவின் பிடிவாதம் மாறவே இல்லை” இது அம்மாவின் பதிலாகும்.
சென்னையில் உள்ள மகன் அப்பா தன்னுடைய ஆசைப்படி ஊரில் உள்ள வீட்டு மனையில் அடுக்கு மாடிக்குடியிருப்பு கட்டுவதற்கு இணங்கவில்லை என அம்மாவின் போன் வந்தநாள் முதல் மகன் மோகன் மிகவும் வருத்தத்தில் மூழகி விட்டான். அவனது மனைவியிடம் தனது கவலையை வெளிப்படுத்தினான்.
“ லதா, எங்க அப்பா இப்படி சொல்வாங்கன்னு நான் நினைக்கவில்லை. எனக்குரிய சொத்துதானே .இப்போதே அதிலே அபார்ட்மென்ட் கட்டினால் குறைந்த செலவுதான் ஆகும். காலம் பிந்தப் பிந்த செலவு பத்து மடங்குபோல கூடிவிடும்..இது ஏன் அப்பாவுக்குப் புரியமாட்டேங்கறது ? நான் அதை வேறு யாருக்கும் வித்துவிடவா போறேன்? “ இப்படி தனது அன்புக் கணவன் கேட்டதும் லதாவுக்கு என்ன கூறி சமாதனப் படுத்துவது என்று யோசித்தாள். லதாவுக்கு அவளது மாமனார் பக்கம் நியாயம் இருப்பதாக நினைத்தாள் .” “மாமா தானே சம்பாதிச்ச சொத்து என்பதால் அவர் காலத்துக்குப் பிறகு உங்களுக்கு வருகிறபடிதான் உயில் எழுதுவாங்க. இப்போ நமக்கு என்று கொடுத்துவிட்டால் அவங்க சந்தோஷம் அறவே போய்விடும்.அதுபோக மாமாவுக்கு தனது சொந்த வீடும் தோட்டமும் உயிர்மூச்சு போன்றது. நாம் வற்புறுத்தி வாங்கிவிட்டோம்னா அவங்க தாங்கமாட்டங்க. நாம் நமது உழைப்பைவைத்து நல்லா சம்பாதிச்சு வேறு எங்காவது கட்டிவிடலாம். கவலைப் படாதீங்க” என்று லதா அருமைக் கணவனிடம் எடுத்துச் சொன்னாள்.ஆனால் அவனுக்கு அப்பா மீது கோபம் குறையவில்லை.” நான் அப்பாவை வற்புறுத்தி விட்டுக்கொடுக்கும்படி வைக்கப் போறேன் “. லதா அதிர்ச்சி அடைந்தாள். ” உஹும் ,நீங்க அப்படிச் செய்யவே கூடாது. முதலாவதாக அந்த ஷாக்கிலேயே அவர் உயிர் போய்விடும். இது மாதிரி என்னுடைய சித்தப்பா தாத்தாகிட்ட அவங்க வீட்டை தனது பெயருக்கு வற்புறுத்தி எழுதி வாங்கி தாத்தாவையும் அவங்க சொந்த விருப்பத்திற்கு மாறாக தாத்தாவின் ஊரிலிருந்து மெட்ராஸ் கூட்டிக்கிட்டு வந்தப்ப தாத்தா அந்தக் கவலையிலேயே செத்திட்டாங்க.அது தவிர நான்தான் உங்களைத் தூண்டி விடுறேன்னு மற்றவங்க சொல்லுவாங்க. தயவு செய்து இதை இனி நினைக்காதீங்க” என்று லதா பதட்டத்தோடு கூறினாள். இது அவளது கணவனின் உள்ளத்தை மாற்றியது . அவளது கணவன் தனது தாயிடம்தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறினான். “அம்மா! நானும் லதாவும் நன்கு யோசித்துப் பார்த்தோம். அப்பா விருப்பப்படி செய்யட்டும். கோடை விடுமுறையில் நாங்க அங்கு குடும்பமாக வந்து ஒரு மாதம் தங்கி கிராமத்து சூழ்நிலையில் மகிழ்ச்சியாக இருப்போம். அது உடலுக்கும் மனசுக்கும் ரொம்ப நல்லா இருக்கும் .நகரத்து நெருக்கடியிலிருந்து விடுபட்டு சுத்தமான காற்று, குளிர்ந்த கிணற்று நீர், குளுமை நிறைந்த தோட்டம் அமைதி தவழும் சுற்றுப்புறம் கொண்ட பிறந்த மண்ணில் வந்து தங்குவது எங்களுக்கு அபூர்வமான சுகானுபவமாகும்.பேத்திகளுக்கும் அது ரொம்ப மகிழ்ச்சி தரும் .அதில் சந்தேகமே கிடையாது” தனது கைத்தலம் பற்றிய கனிவான கணவன் அவனது அம்மாவிடம் போனில் கூறியதை லதா கேட்டாள். அவள் உள்ளத்தில் நிம்மதி பிறந்தது. (The End)
Story written by D.J.MANGALARAJ in August 2015 and typed using Transliteration for Tamil.
குறிப்பு : இக்கதை message –க்காக எழுதப்பட்டதாகும்.
காலச் சக்கரத்தின் சுழற்சியில் உலகத் தோற்றமுதல் பல தலைமுறைகள் தோன்றி வாழ்ந்து மறைகின்றன.ஒவ்வொரு தலைமுறையிலும் வாழ்கை முறையில் மாற்றங்கள் நிகழ்ந்தவாறு இருக்கின்றன. மூத்த தலைமுறையினர் சிலர் இளைய தலைமுறையினரின் கருத்துக்களை ஏற்று தங்களை மாற்றிக்கொள்கின்றனர். மாறாத முந்தைய தலைமுறையினரோடு இளைய தலைமுறையினர் சிலர் விட்டுக்கொடுத்து ஒத்துப் போகின்றனர். இப்படி இரண்டு தலைமுறையினரும் விட்டுக்கொடுத்து ஒத்துப் போய்விட்டால் பிரச்சினை வராது. ஆனால் மாற்றங்கள் தவிர்க்கமுடியாதவையாகக் காலம் முழுதும் தொடரத்தான் செய்யும். ஆகவே பிரச்சினைகளும் தொடரத்தான் செய்யும்.
ரோடிருக்கும்போது அவர் சொல்கிறபடி காரியங்கள் நடக்கும். அவரது வாழ்வு முடிந்து விட்டால் மறைந்தவரஒருவர் உயி் விரும்பியபடி நடக்காமல் இருப்பவர் விருப்பப்படிதான் நடக்கும். ஒருவர் கடவுள் நம்பிக்கை இன்றி இருக்கலாம். ஆனால் அவரது மறைவுக்குப்பின் இறுதிச் சடங்குகள் மதம் சார்ந்ததாக அமையலாம். அவர் விரும்பியபடி நடக்கும் என்ற நிச்சயம் இருப்பதில்லை.
சித்தப்பா நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார். ஆனால் உடலில் ஏராளமான காம்ப்ளிகேஷன்ஸ் எண்ணற்ற கம்ப்ளேய்ண்ட்ஸ் இருப்பதாகச் சித்தி என்னைப் பார்க்கும்போதெல்லாம் கூறுவார்கள். ஆம். சித்தப்பாவிற்கு டையாபடீஸ் நீண்ட காலமாக இருக்கிறது. கிட்னி சரியாக செயல் படவில்லை. ஏழ்மையின் காரணமாக பெரிய வைத்தியம் பற்றி எண்ணிப் பார்க்க முடிவதில்லை. எனவே அவர்களது நகரில் இருக்கும் டாக்டரிடம் காட்டி மருந்து மாத்திரை சாப்பிட்டுக் காலத்தை ஓட்டுகிறார்கள். சித்தப்பா நிறைய வறட்டுப்பெருமையும் முரட்டுக்குணமும் உடையவர்கள். பஞ்சாலையில் வேலை பார்த்தபோது கம்யூனிஸ்ட் கட்சியில் ஈடுபாடு கொண்டு போராட்டங்களில் பங்கேற்று தனது பிடிவாதத்தை வளர்த்துக் கொண்டவர்கள். கடவுள் மறுப்புக் கொள்கை குருதியில் கலந்திருந்தது கோயில் குளம் எதற்கும் போவதில்லை. சித்தப்பாவிடம் நிறைந்திருந்த பகுத்தறிவு எண்ணங்கள், மூடநம்பிக்கைகள் நெஞ்சில் இடம் பெறுவதைத் தடுத்து நிறுத்தின.
சித்தியும், சித்தப்பாவை எதிர்த்து நின்று தனது ஆதிக்கத்தை ஒருசிறிதும் விட்டுக்கொடுக்காமல் குடும்ப வாழ்வினை நடத்திவந்தார்கள். சித்தி யாரோடும் வம்புக்குப் போவதும் இல்லை .வந்த சண்டையை விடுவதும் இல்லை. சித்தி தனது திருமணத்திற்கு முன்புவரை கிராமத்தில் வாழ்ந்து கடிமான விவசாய வேலைகளைப் பார்த்திருந்த காரணத்தால் திட காத்திரமான உடற்கட்டுடன் மிகுந்த மனவலிமையும் பெற்று திகழ்ந்தார்கள்.
சித்திக்கு ஐம்பது வயதுதான் இருக்கும்’. எந்த விதமான நோய்நொடியும் அண்டமுடியாதபடி பரம்பரையாக வந்துள்ள உடல்வலிமை எல்லையற்று இருந்தது. ஆண்கள் செய்யும் வேலைகளை அவர்களுக்கு இணையாகச் செய்யவல்ல தெம்பும் திராணியும் நிறைய இருந்தது. சித்தப்பாவை போலீஸ் ஸ்டேஷன்ல விசாரிக்கக் கூட்டிப்போயிருந்தபோது சித்தி நேராக அங்கே போய் வீராங்கனையாக வாதாடி மீட்டுக் கொண்டு வந்ததை ஊரே பார்த்து வியந்ததுள்ளது.
சித்தி நகரத்தில் இருக்கும் மாதா கோவிலுக்குப் போவதுண்டு. பிறந்த குடும்பம் அதற்குக் காரணம் எனலாம். கோவிலுக்குப் போவதற்குக் கடவுள் பக்தி ஒன்று மட்டுமே காரணம் கிடையாது. வாழும்போது எல்லா நன்மைகளும் பெற்று வாழ்ந்திட வேண்டும் என்பது முக்கிய நோக்கம் என்றாலும் வேறொரு நோக்கமும் கோவிலுக்குப் போகிறவர்களுக்கு உண்டு.. முதுமைக்காலத்தில் மரணம் அடயும்போது உடலை அடக்கம் பண்ண மாதா கோவிலுக்குரிய கல்லறைத்தோட்டம் மிகவும் அவசியமான தேவை ஆகும். சித்தி மட்டுமே மாதா கோவிலுக்குச் சந்தாப் பணம் கட்டி உறுப்பினராக உள்ளார்கள். மேலும் அவ்வப்போது கோவிலுக்குச் சென்று தலையைக் காட்டிவருவார்கள்.ஆனால் சித்தப்பாவை மாதாகோவிலில் யாருக்குமே தெரியாது.. முக்கியமாக மாதா கோவிலின் பங்குத்தந்தைக்கு சித்தப்பாவைத் தெரியாது.
சித்தியின் மனத்தில் ஒரு கவலை இருந்தது. ஏற்கனவே சித்தப்பா அறுபது வயதைத் தாண்டி விட்டதாலும், பலவிதமான உடல் கோளாறுகளால் அவர்கள் பாதிக்கப் பட்டிருப்பதாலும் நினையாத நேரத்தில் வாழ்வின் முடிவினைச் சித்தப்பா சந்திக்க நேரலாம் என்ற பயம் சித்திக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருந்தது.
ஒருநாள் மாலையில் நான் சித்தியை அவர்கள் வீடு இருக்கும் எங்கள் தெருவில் பார்த்தேன். “எங்கே சித்தி போயிட்டு வாறீங்க?” என்று அவர்களிடம் கேட்டேன் .”மாதாகோவிலுக்குப் போயிட்டு வாறேன்” “எல்லாரும் அப்பவே கோவில் முடிஞ்சி வந்துட்டாங்களே”. “நான் சாமியாரைப் பார்த்து சித்தப்பா பத்திச் சொல்லிட்டு வாறேன்” “சித்தப்பாவுக்கு சாமியாரிடம் என்ன கேட்டிங்க? ““சித்தப்பா மாதா கோவிலுக்குப் போனதே கிடையாது. திடீர்னு சித்தப்பாவுக்கு
எதுவும் ஆயிருச்சினா அடக்கம் பண்ணனுமே .அதுக்குத்தான் இப்போவே பணம் கட்டி கல்லறைத்தோட்டதிற்குப் பெர்மிஷன் வாங்குற விஷயமா பேசிட்டு வாறேன்”
சாவினப் பற்றி சிறுவர்களிடம் இளம் வயதினர் வேடிக்கையாகப் பேசுவதுண்டு. யாராவது ஒரு சிறுவன் “ அவர் ஏன் அண்ணா, செத்தார் ?” என்று கேட்டால் இளைஞனான அண்ணன் “அவர் மூச்சு விட மறந்துட்டார்” என்று சிரிக்காமல் கூறுவதுண்டு. அதுபோல வெகுளியாக புத்தி கூர்மை இன்றி இருக்கும் நடுவயது ஆளிடம் சில பெண்கள் கூட கேலியாக. “அண்ணா, உங்க பெண்டாட்டி தாலி அறுத்த அன்னைக்கி நீங்க எங்க இருப்பீங்க “ என்று கேட்பதுண்டு.
இளம் செடி பட்டுப் போகும் என்று எவரும் எதிர்பார்ப்பதில்லை. இளம் வயதில் சாவு பற்றி யாருக்கும் நினைத்துப் பார்க்கத்தோன்றுவதில்லை. எனவே இளம் வயதில் சாவு பற்றி விளையாட்டாகப் பேச முடிகிறது.
ஆனால் அறுபது வயதினைத் தாண்டிய பின்பு ஆணானாலும்பெண்ணானாலும்
சாவு பற்றி ஒரு பயம் மெல்ல மெல்ல நெஞ்சில் குடிகொள்ளத் துவங்குகிறது.
எனவேதான் சித்தி மாதாகோவில் சாமியாரிடம் சென்று சித்தப்பாவையும் ஒரு உறுப்பினராக ஆக்கி கல்லறைத் தோட்டத்தில் இடம் ஏற்பாடு பண்ண நினைத்துள்ளார்கள். சித்தப்பாவிடம் அதுபற்றி எதுவும் சொல்லாமலே முயற்சி மேற்கொண்டுள்ளார்கள். சித்தி என்னிடம் மட்டும் இதைச் சொல்லி “நீ அவர்களிடம் சொல்லிவிடாதே. நேராக மாதாகோவில் சாமியாரிடம் சென்று காரியத்தைக் கெடுத்து விடுவார்கள்” என்று கேட்டுக் கொண்டார்கள். சிறிது காலம் நான் சென்னைக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பினேன். எனது வீட்டிற்குள் நுழையும் முன்பே பார்த்தேன். எங்கள் தெருவின் மறு முனையில் சித்தாப்பா வீட்டருகில் ஒரே கூட்டமாக இருந்தது. எனக்கு விஷயம் புரிந்து விட்டது. சித்தப்பா கதை முடிந்துவிட்டது என்று நினைத்தேன். நான் அங்கு போனேன். ஆனால் என் கண்கள் கண்ட காட்சி. .சித்தப்பா கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் முன் சித்தியின் உயிரற்ற உடலில் பூமாலை போட்டிருந்தது. இதுதான் விதியின் விளையாட்டு என்பது.. முடிவுவரிசை மாறிவிட்டது. (D.J.Mangalaraj 20-03-2016)
Copyright © 2023 mangalaraj@gmail.com - All Rights Reserved.
Powered by GoDaddy