புரட்சிகரமான எண்ணங்கள் மனத்தில் உதித்துக்கொண்டே இருப்பது வழக்கமாகிவிட்டது.
எதையும் பகுத்தறிவுடன் அணுகும் எனது பழக்கம், எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ள அனுமதிப்பதில்லை.ஏன், எதற்கு, எப்படி என்ற வினாக்கள் மனத்தில் எழும்புவது வாடிக்கையாகிவிட்டது.
சிந்தனை*
மனிதனுக்காகத்தான் விதி உள்ளது என்று கொள்ள வேண்டுமே தவிர விதிக்காக மனிதன் என்று கொள்தல் கூடாது.
உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒருவனுக்காக, விதியை மீறினால் உயிரைக் காப்பாற்ற முடியும் என்றால் விதியை மீறுதல் தவறாகாது.
சிந்தனை
நம் தலைக்கு மேலே பரலோகம் இருக்கிறது என்றால், பூமியில் நமக்கு எதிர்முனையில் ( எடுத்துக்காட்டாக அமெரிக்காவில்) உள்ளவர்களுக்கு அவர்களது காலுக்குக் கீழே அது இருக்கிறதாக அல்லவா அமையும்!
சிந்தனை
SUN தொலைக்காட்சியில் 757 நாட்கள் தொடராக வந்த 'அண்ணாமலை' முடிவுக்கு வந்த போது அதன் மையக் கருத்து வெளிப்பட்டது. இந்த உலகத்தில் வாழ்ந்திடும் போது, பக்திக்காக எதையும் துறக்கத் தேவையில்லை என்னும் கருத்து இறுதிக் காட்சிகளில் வலியுறுத்தப்பட்டது. உற்றார், உறவினரை - பெற்ற பிள்ளைகளை - சொந்தபந்தங்களை எல்லாம் மறந்துவிட்டு கடவுளைத் தேடி துறவறம் பூணுதல் தேவையற்றது என்பது நன்கு உணர்த்தப்பட்டது.
' அவ்வுலகம்' என்று இல்லாத உலகத்திற்காக இவ்வுலகத்தின் வாழ்வை இழப்பது அறிவீனம் அன்றோ? நேசிக்கப்பட வேண்டிய உயிர்களையும் உறவுகளையும் தொடர்பின்றித் துண்டித்து விட்டு இறைவனோடு ஐக்கியப்படுவதாகக் கூறி தனித்துப் போதல் பயன் தருமோ ? காணாத கடவுளை அடைவதாகக் கருதிக் கொண்டு கண்முன்னே காட்சி தரும் உயிர்களை மறக்கலாமோ?
சிந்தனை
தாயையும், தகப்பனையும், உடன் பிறந்த சகோதரர் மற்றும் சகோதரிகளையும் - உதறித்தள்ளி விட்டு பக்தியில் மூழ்கிடும் பேதமையைக் கண்டு என் நெஞ்சு பொறுக்கவில்லை. தன்னைச் சுற்றியுள்ள உறவுகளை வெட்டி விடச் சொல்லும் சமய போதனை எப்படி நியாயமாகும்? இவ்வாறு எல்லாரையும் ஒதுக்கித்தள்ளிவிட்டு தன்னை மட்டும் தனி ஆளாகத் தேடி வருமாறு கடவுள் கூறுவாரா? கடவுள் பெயரால் ஏதோ ஒரு மனிதன் கூறுவதை, சொல்லுகின்ற அந்த மனிதனே பின்பற்றமாட்டான்.' பிறரை நேசி' என்று கூறிடும் அதே வேளையில் ' எல்லாரையும் விட்டு விடு' என்று கடவுள் எப்படிக் கூறுவார்.?'' கடவுள் தன்மைக்கு'' மனிதர் எவ்வாறு பொறாமை மற்றும் தன்னலம் என்ற சாயம் பூசலாம்? How can God be jealous and selfish?
சிந்தனை
மனிதன் வாழும் காலம் மிக அதிகமாக நூறாண்டுகள். அதன்படி பார்த்தால் ஒரு மனிதனின் பேரும் புகழும்நூறாண்டுகள் வரை மட்டுமே நிலைத்து நிற்க முடியும். அதன் பின் ஒரு மனிதனின் பெருமையும் புகழ்ச்சியும் யாராலும் நினைவுகூரப்படாது. பேசப்படாது. வாழும் வரை அந்த மனிதன் செவி கேட்க புகழப்படலாம். இந்தப் புகழ்ச்சியைத்தேடி, நாடி எந்த மனிதனும் ஓடத் தேவையில்லை. எந்த மனிதன் ஆனாலும் மறைந்த பின்பு அவனது கல்லறை அடையாளம் காணப்படாமல் போய்விடும். இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். மறக்கப்பட்டு விடும். இந்தப் புவியின் மீது வாழும் வாழ்வு குறுகியது. நிரந்தரமற்றது; நிலையற்றது. மனித வாழ்வு குறித்து மேன்மைபாராட்ட எதுவுமில்லை. எல்லாம் மாயை
சிந்தனை
வாழ்க்கையைப் பற்றிய ஒரு இனிய உண்மை, வாழ்க்கை எப்போதும் புதியது. புதுமைக்கு எந்நாளும் அதில் இடமுண்டு என்பதாகும்.
கழிந்து செல்லும் ஒவ்வொரு கணமும் புதியதோர் வாழ்வுக்கு, புதுமை நிறைந்த வாழ்வுக்கு அளவற்ற வாய்ப்பு அளிக்க வல்லது.
ஆதலின், இழிந்த பழமை வாழ்வை எண்ணிக் கலங்காது, உயரிய ஒப்பற்ற புதிய வாழ்வை அமைத்துக் கொள்ள எவராலும் , எப்போதும் முடியும். (Written in 1962)
சிந்தனை
நிலவின் மறுபக்கம்
நாம் எப்போது நிலவினைப் பார்த்தாலும் நாம் காண்பதெல்லாம் அதன் ஒரு புறமே ஆகும். ஆம், ஒளிசிந்தும் அதன் ஒரு புறமே ஆகும், இருண்ட அதன் மறுபக்கம் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை..
நிலவிடத்து எப்போதும் ஒளியுள்ள ஒரு புறத்தையே நாம் காண்பது போல, வாழ்விலும் நாம் ஒளியுள்ள பக்கத்தினை மட்டுமே பார்ப்போம். அதன் சிறப்பினை நினைப்போம். மகிழ்வோம், வாழ்வின் இருண்ட பகுதியினை எண்ணாமல் இருப்போம். வாழ்வின் துயரங்களை மறப்போம்.
சிந்தனை
நல்ல நேரம் : நல்ல நாள்
உலகம் முழுமைக்கும் பொதுவான நேரம் ஒன்றை நல்ல நேரம் என்றால் அதிலாவது பொருள் இருக்க முடியும். ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால் பூமியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ளவருக்கு இது நல்ல நேரம், இது நல்ல நேரமல்ல என்று கூறுவதை ஏற்க முடியாது.
நல்ல நாள் பற்றியும் இதே நிலைதான் எடுக்க வேண்டும். இன்று இந்தியாவில் வெள்ளிக்கிழமை என்றால் அமெரிக்காவில் வியாழக்கிழமையாக உள்ளது. இங்கு செவ்வாய் என்றால் அங்கு திங்களாகும். எனவே நாட்காட்டியில் ஒரு தேதியில் நல்ல நாள் என்று போடப்படுவது யாவருக்கும் பொருந்தாது.
சிந்தனை
வாழ்வின் முடிவு இன்றா நாளையா என்று வாழவின விளிம்பில் நிற்கும் நிலையில் கூட மனிதன் உடலை வருத்திக் கொண்டு நோன்பு இருத்தல், புனித இடங்களுக்கு நெடும்பயணம் மேற்கொள்ளல் போன்ற சமயச் சடங்குகளை நிறைவேற்றுவது ஏன் என்று தெரியவில்லை. பலன்கள் இவ்வுலகத்துக்கானதாக இருக்க முடியாது. அடுத்த உலகத்துக்கானதாகத்தான் இருக்க முடியும்.
மனித வரலாற்றை உற்று நோக்கினால் மறுபிறவி பற்றிய மனிதனின் நம்பிக்கை வெளிப்படுகிறது. சொர்க்கம், நரகம் இருப்பதாக நம்பி வாழ்ந்துள்ளனர்.
சிந்தனை
மனிதனுக்குக் கடவுள் பற்றிய எண்ணம் எழக் காரணம் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மையும், பயமும்தான். மனிதன் தன்னைத் திணறவைக்கும் சிக்கல்களிலிருந்து விடுபட விரும்பியே கடவுளைத் தேடுகிறான். இவ்வுலகில் நல்ல வாழ்வு அமைய வேண்டும் என்று கடவுளை நாடுகிறான். பின்னர் அடுத்த வாழ்வு பற்றிய கவலையின் காரணமாகவும் கடவுள்மேல் பக்தி பக்தி கொள்கிறான்.
சிந்தனை
கடவுள் நம்பிக்கை மனிதனிடம் தானாகத் தோன்றுவதாகக் கருத முடியாது. சமூகச் சூழல்தான் அதனை அவனிடம் தோற்றுவிக்கிறது.
சிந்தனை
மேலுலகம் என்று ஒன்று இருப்பதாக எல்லா மதத்தினரும் நம்புகிறார்கள். இறப்புக்குப் பின்னர் மறுவாழ்வு இருப்பதாக எல்லா மதத்திலும் சொல்லப்படுகிறது. உலகத்தின் முடிவு நாளில் மரித்துப்போனவர் அனைவரும் மீண்டும் உயிர்பெற்று ஒன்றாகச் சேர்ந்து விடுவார்கள் என்று கூறப்படுவதை ஏன், எப்படி, எதற்கு என்று எந்தக் கேள்வியும் எழுப்பாமல் அப்படியே நம்பி விடுமாறு மதபோதனைகளால் வழி நடத்தப்படுகின்றனர். உயிர் பெற்று உடலும் பெற்று உலவிடுவார்கள் என்றால் நிச்சயமாக இந்த உலகம் தாங்காது. உடலில்லாமல் ஆவி வடிவத்தில் இருந்தால் அடையாளம் காண முடியாமல் போகும்.
சிறு வயதில் இறந்து போனவர்கள் அவர்களின் அன்புக்குரியவர்கள் முதியவராய் மரித்திருந்தால் எப்படி அடையாளம் கண்டு கொள்ள முடியும்? புவி மீது வாழ்ந்த காலத்தில் கொலை செய்யப்பட்டவர்கள், பல கொடுமைகளுக்கு ஆளாக்கப் பட்டவர்கள் உலகத்தின் முடிவு நாளில் உயிர் பெற்றெழும்போது பழையவற்றை நினைத்து உறவாடுவார். களா? அவற்றை எல்லாம் மறந்து விட்டுப் புதியவர்களாக உறவாடுவார்களா? இப்பூமியில் பிறந்து மறைந்த உயிர்களெல்லாம் மீண்டும் உயிர்த்தெழுந்த பின்னர் என்ன நடக்கும்? முடிவு என்பதே இல்லாமல் நித்திய நித்தியமாய் அப்படியே போய்க் கொண்டிருப்பதால் என்ன நன்மை உண்டு? சலிப்பு ஏற்பட்டு விடாதா?
சிந்தனை
பகுத்தறிவு பார்வைதான் புரட்சிகரமான சிந்தனைகளுக்கும், முடிவுகளுக்கும் காரணம் ஆகும். அறிவுசார்ந்த அணுகுமுறையே முடிவெடுப்பதில் சரியாக இருக்கும். உணர்வு சார்ந்த முடிவுகள் தவறாக அமைத்துவிடும்.
சிறு வயது முதல் எதையும் பகுத்தறிவு பார்வை மூலம் அணுகி வந்துள்ளதால், மூடப் பழக்கங்களையும், மூட நம்பிக்கைகளையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சமுதாயத்தில் நிலவுகின்ற மூடத்தனத்திற்கு எதிராகவே என் மனம் செயல்பட்டு வந்துள்ளது.
பிறந்து சில மாதங்களே ஆன பச்சிளங் குழந்தைக்கு மொட்டை போடுவதில் நியாயம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பெற்றோர் வேண்டுமானால் தாங்களே மொட்டை போட்டுக் கொள்ளலாம். ஒன்றும் அறியாப் பிஞ்சுக்குழந்தைக்கு மொட்டை போடுவது எதற்காக என்று தெரியவில்லை.
தங்களது நேர்த்திக்கடனுக்காக நடக்க முடியாத நிலையில் பச்சிளம் பாலகருக்குத் தலையில் குடம் வைத்து காவடி எடுக்க வைப்பது எந்த விதத்தில் நியாயம்? குழந்தை மறுப்புக் கூறமுடியாத நிலையில் இருப்பதால் அதைப் பயன்படுத்தி இதைப் போன்று வதைக்கலாமா? குழந்தையை இப்படிச் சித்ரவதை செய்ய பெற்றோருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? கேட்க யாருமில்லை என்ற தைரியத்தில் இது போன்ற செயல்களைப் பெற்றோர் எவ்வாறு செய்யலாம்?
மூட நம்பிக்கை காரணமாக இது போன்று அறிவில்லாத செயல்கள் பல நடைபெறுவதைக் காணலாம். முன்னேறாத கிராமத்து மக்கள், அவர்கள் வழிபடும் கோயில் பூசாரி சொன்னவாறு பருவத்தை எட்டும் நிலையில் உள்ள சிறுமிகளை பத்து நாட்கள் கோவிலில் பிரித்து வைத்து, முடிவில் அதில் ஒரு சிறுமியைத் தேர்வு செய்து, தெய்வ அனுக்கிரகம் பெற்றவள் அவள் என்று கூறி, அவளைத் தெய்வ நிலைக்கு நியமிப்பது எந்த வகையில் யோக்கியமானதாகக் கருத முடியும்? அச்சிறுமிகளின் பாதுகாப்புக்கு உறுதியில்லாதவாறு பெற்றோர் தனித்து அனுப்புவது எவ்வாறு சரியாகும்.? உளவியல் பிரச்சினைகள் ஏற்படுமல்லவா
-----------------------------------------
மதநம்பிக்கைக்கு மூல காரணம் பலவீனமான மனித மனம் தான். தன்னை நம்பாதவர் (தன்னை நம்பும் மனமில்தாவர்) மதத்தை நம்புகின்றனர். மதத்தை நம்புகிறவர்களுக்குச் சாமியார்களின் துணை தேவைப்படுகிறது. சாமியார் என்பவர் சாதாரண மனிதர் தான். எல்லாரைப்போல மனித பலவீனங்கள் உடையவர்தான்.சாமியார்கள் என்பதால் அவர்கள் புனிதமானவர்கள் அல்ல.
போலிச்சாமியார்கள் முற்றிலும் ஏமாற்றுக்காரர்கள். அயோக்கியர்கள்.
பெரும்பாலும் சா|மியார்களுக்கு முக்கியமான நோக்கமாகத் திகழ்வது பணமே. அவர்களின் இரண்டாவது பலவீனம் பெண் ஆகும். பெண்களை மயக்கிச் சல்லாபத்தில் ஈடுபடுவது போலிச்சாமியார்களின் பொழுது போக்கு கடவுள் பக்தி எனும் போர்வையின் மறைவில் காமக்களியாட்டம் போடுவது போலிச்சாமியார்களின் விளையாட்டு. அறியாமையினால் கணவர்கள் தங்கள் மனைவிமாரைப் போலி வேடதாரிகளுக்குப் பலியாக்குகிறார்கள். இளம் பெண்களும் காமவலையில் சிக்கிச் சின்னா பின்னமாகிறார்கள்
----------------------------------------------------------------------------------------------------------
மதம் பாதுகாப்பு தராது
மதத்தால் மனிதனைப் புனிதம் இழக்காமல் காக்க முடியாது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். மத போதனைகளால் சோதனையிலிருந்து மனிதனை மீட்க முடியாது. உடலிலுள்ள ஹார்மோன்கள் காரணமாக இனக் கவர்ச்சி உண்டாகிறது. எத்தனை புனிதரானாலும் இரு எதிர்ப்பாலினர் தனிமையில் இருக்க நேர்ந்தால், இருண்ட சூழலில் தனித்து விடப்பட்டால் மதம் இடையே அரணாக நின்று தடுக்க இயலாது. எந்த மதம் என்றாலும், துறவியாக இருந்தாலும் காமத்தை வெல்ல முடியாது. மதபோதனை முள்வேலியாக அமைந்து வீழ்வதிலிருந்து காத்திட முடியாது. இளம் பெண் சாமியாரை நம்பிப் போகக் கூடாது. தெரியாத இளைஞனைக் கூட நம்பலாம். ஆனால் பக்தி வேடம் போடும் போலியான கடவுள் மனிதரை நம்பவே கூடாது. மதம் என்பது மாயை. கடவுள் பேரைச்சொல்லுவதால் மட்டும் கயமைத்தன்மை அழிவதில்லை.
--------------------------------------------------------------------------------
மத நம்பிக்கையெனும் விலங்கு
மத நம்பிக்கை மனிதனின் சுதந்திரமான சிந்தனைகளுக்கும், செயல்களுக்கும் தடையாகத் திகழ்கின்றது. எவ்வாறு சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ள மனிதன் சுதந்திரமாக நடமாட முடியாதோ, அதே போன்று மதத்தில் நம்பிக்கை கொண்டுள்ள மனம் சுதந்திரமாக சிந்திக்க முடியாது. மதக்கோட்பாடுகள் கைவிலங்கு போடுகின்றன. மதநம்பிக்கை மனிதனுக்குக் கால்விலங்கு
இடுகின்றது. கதிரவன் உதித்திடும் காலை முதல் இருள் சூழ்ந்திடும் இரவு வரை மனிதன் எதைச் செய்தாலும் மதத்தின் குறுக்கீடு தோன்றி இடையூறு விளைவிககின்றது. அறிவு பூர்வகமாக இயங்க விடாமல் தடைகளை மத நம்பிக்கை தோற்றுவிக்கின்றது .அறிவு அடக்கப்படுகின்றது.அறிவு முடக்கப்படுகின்றது. அறிவு மழுங்கடிக்கப்படுகின்றது. சமய சடங்குகளால், சம்பிரதாயங்களால் எண்ணற்ற இடைஞ்சல்கள் மனிதனுக்கு ஏற்படுத்தப் படுகின்றன. மத நம்பிக்கையில்லாதவன் மூடப்பழக்க வழக்கங்கள் இன்றி பொன்னான நேரத்தையும், தனது சக்தியையும் வீணாக்காமல் வாழ்கிறான்
Copyright © 2023 mangalaraj@gmail.com - All Rights Reserved.
Powered by GoDaddy